தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 2 June 2018

நூல் அறிமுகம்

வாழ்வும் மரணமும் 




வாழும்போது எத்தனை முறை சிந்தித்தாலும், மரணம் என்றால் என்ன என்று தெரிவதில்லை. ஆனால் மரணப்படுக்கையில், வாழ்வு என்றால் என்ன என்று உடனே புரிந்துவிடுகிறது

அப்படி அதனைப் புரிந்து, அது குறித்து ஒரு நூலே எழுதியுள்ளார், 37 ஆவது அகவையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிட்ட மருத்துவர் பால் கலாநிதி! அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நரம்பியல் அறுவை வல்லுனராகப் பணியாற்றிய அவர், ஆங்கில இலக்கியத்திலும், வரலாறு, தத்துவம் ஆகிய துறைகளிலும் பட்டங்களைப்  பெற்றுள்ளார். அவர் எழுதியுள்ள ஓர் ஆங்கில நூலை அண்மையில் படித்து முடித்தபோது, நெஞ்சமெல்லாம் கனத்தது.


நூலின் தலைப்பே, அவருடைய இலக்கிய ஈடுபாட்டைக் காட்டுகின்றது. "மூச்சு - காற்றாக மாறும்போது" (When breath becomes air)  என்னும் தலைப்பே எத்தனை இயல்பானதும், கவித்துவமானதுமாக உள்ளது! நூலுக்குள்ளும் பல ஆங்கில இலக்கிய மேற்கோள்கள்கள் காணப்படுகின்றனதுயரம் சூழ்ந்த தன் வாழ்வைக் கூடபல இடங்களில்  இலக்கிய.நயத்தோடு அவரால் எழுத முடிந்திருக்கிறது


தான் சில காலமேனும்  எழுத்தாளராக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரால் எழுத முடிந்த ஒரே ஒரு நூல், வாழ்வின் இறுதியில் நிற்கிறோம் என்று அறிந்து, அவர் எழுதியுள்ள இந்தத் தன்வரலாற்று நூல் மட்டும்தான்!  

வாழ்வும் மரணமும் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில், இந்த நூலை எழுதி முடிப்பதற்குள், மரணம் வென்றுஆட்டம் முடிந்துவிட்டது. மரணத்தை வென்று அவர் மனைவி லூசி இந்நூலின் பின்னுரையை எழுதி அவரை வாழவைத்துள்ளார்

|வாழ்வு இனிமையானது. மரணம் அமைதியானது. ஆனால் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவதுதான் மிகக் கடினமானது" என்று எழுதுவார், அமெரிக்க எழுத்தாளர் ஐசக் ஆசிமோவ். அந்த மாற்றத்தை விடக் கடினமானது, அது எப்போது நிகழப் போகிறது என்பதை அறிந்து  வாழ்வது

36 ஆவது அகவையில், புகழ் பெற்ற மருத்துவராக, அமெரிக்க நரம்பியல் அறுவை வல்லுநர் கழகத்தின் உயர்ந்த ஆய்வு விருதை பெற்றவராகத் திகழ்ந்த வேளையில்தான், தன்னைப் புற்று நோய் தாக்கியுள்ளது என்னும் செய்தி உறுதிப்படுகிறது. இன்னும் ஓராண்டுக்குப் பிறகு, எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம் என்று தெரிந்தபிறகு, அவர் வாழ்வு எப்படியிருந்திருக்கும்

இந்நூல் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. முழு உடல்நலத்துடன் இருந்த வேளையில் வாழ்க்கை எப்படியிருந்தது என்பது முதல் பகுதி. மரணத்தின் வாசல் கண்களுக்குத் தெரிந்தபின் எப்படியிருந்தது என்பது இரண்டாவது பகுதிஅவர் மனைவி லூசி எழுதியுள்ள 'பின்னுரை' (Epilogue) முன்றாவது பகுதியாக அமைந்துள்ளது

எந்த மருத்துவமனையில் மருத்துவராக இருந்தாரோ, அதே மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்படுகிறார். எந்த அறையில் அமர்ந்து நோயாளிகளுக்கு ஆறுதல் சொன்னாரோ, அதே அறையில் அமர்ந்து மருத்துவர்களின் ஆறுதல் மொழியைக் கேட்க நேர்கிறது. எந்த அறையில்,  2015 மார்ச் 9 ஆம் நாள் அவர் உயிர் பிரிந்ததோ,  அந்த அறையிலிருந்து 200 மீட்டர் தொலைவில்தான், எட்டு மாதங்களுக்கு முன் அவர் குழந்தை பிறந்தது.

அவர் எழுதுகிறார் - "குழந்தை பிறக்கப்போவது மகிழ்ச்சிதான். ஆனால் அந்தக் குழந்தை தவழும்போதும், சிரிக்கும்போதும், கை அசைக்கும்போதும், பள்ளிசென்று வரும்போதும், அந்த நிகழ்வுகளையெல்லாம் பார்ப்பதற்கு நான் இருப்பேனா என்று தெரியவில்லை." இல்லை, எந்தக் காட்சியையும் பார்க்க அவர் உயிருடன் இல்லை.

ஆனாலும் அவர் மரணத்தைத் துணிவோடும், ஒருமித்த மனத்தோடும்தான் சந்தித்தார் என்பதற்கு என்ன சான்று? "அதற்குச் சான்றாகவும், அவர் மனைவியாகவும் இருப்பவள் நானே" என்ற லூசியின் வரிகளுடன் அந்த நூல்  முடிவடைகின்றது

இந்த நூல் மரணம் பற்றிப்  பேசுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். எனக்கென்னவோ, இந்த நூல் வாழ்வு பற்றியே பேசுவதாகப் படுகிறது.

எந்நேரமும் எவருக்கும் மரணம் வரலாம். அது வயது பார்த்தோ, வரிசைப்படியோதான் வரும் என்பதற்கு எந்த  உறுதியும் இல்லை


எனவே மரணம் நம் வீட்டுக் கதவைத் தட்டுவதற்குள், வாருங்கள் மனிதகர்களே, வாழ்ந்து விடுவோம்!

Paul Kalanithi-  "When Breath Becomes Air'' - Vintage, Penguin Random House, 20, Vauxhall Bridge Road, London/ First Ed - 2017

4 comments:

  1. இரத்தினவேல்2 June 2018 at 15:17

    சமுதாயம் பயன் பெறுமாறு வாழ்பவர்களுக்கு வரலாற்றில் என்றும் மரணமில்லை.

    ReplyDelete
  2. புற்று நோய் சட்டென வரக்காரணம் அதீத பிளாஸ்டிக் பயன்பாடு. எந்த நோய்க்கான காரணங்களையும் நாம் பேச விடாமல் தடுப்பது எது..

    ReplyDelete
  3. Super tala,

    Good that you have started blogging again, I feel its better if you stay in UK and visit India periodically :-), i suppose you have ample time to read and write.

    ReplyDelete
  4. Dear Sir,

    I ordered this book in amazon and I just finished it.
    Thanks for finding this gem and sharing...
    I feel very sorrow for Paul, in fact for all of us,living a precarious life without any definitive future.Really made me sad, and at the same time, created a sense of urgency in our endeavour. I guess that is the intention of the author.

    Thanks again.




    ReplyDelete