தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 26 August 2016

சுயமரியாதை - 13


அச்சம் விடுக! அறிவு பெற்றெழுக!!


சமூக நீதிச் சிந்தனைகளோடு பகுத்தறிவையும் பெரியார் சேர்த்துக் கொண்டபோது இம்மண்ணில் சுயமரியாதை இயக்கம் பிறந்தது என்றால், அதற்கு முன் பகுத்தறிவுச் சிந்தனைகளே தமிழ்நாட்டில் இல்லை என்று பொருள் ஆகாது. 


உலகம் தோன்றிய விதம் குறித்து, 

"நிலம்தீ  நீர்வளி  விசும்போ டைந்தும் 
கலந்த மயக்கம் உலகம்" 

என்று தொல்காப்பியம் கூறுவதே அறிவியல் வழிப்பட்ட சிந்தனைதான்.  "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்" "எப்பொருள் எத்தன்மைத் தாயினும்" அவற்றின் "மெய்ப்பொருள் காண்பது  அறிவு" என்னும் திருக்குறள் பகுத்தறிவுச் சிந்தனை உடையதே. அடுத்தடுத்து வந்த தமிழ் இலக்கியங்களிலும் பகுத்தறிவுக் கருத்துகள் அங்குமிங்குமாக இடம்பெற்றே உள்ளன. 

எனினும் இலைமறை காயாக இல்லாமல் நேரடியாகவும், பகுத்தறிவுச் சிந்தனைகளை ஓர் இயக்கமாகவும் கொண்டு சென்ற பெருமை பெரியாரையே சேரும்.

தன்  70ஆவது அகவை நிறைவின்போது, "நான் எனது 17ஆவது வயதிலேயே இந்தக் கடவுள்களையும், இந்தப் பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டேன். அதிலிருந்து இன்று வரைக்கும் சுமார் 53 ஆண்டுகளாக நானும் பகுத்தறிவுப் பிரசாரம் செய்து வருகிறேன். இதனால் நானெனென்ன செத்து விட்டேனா?அல்லது எனக்கு இழிவு ஏற்பட்டுவிட்டதா? இல்லையே! பின் ஏன் நீங்கள் பகுத்தறிவு வழிநடக்க அஞ்சுகிறீர்கள்? அச்சம் விடுங்கள், அறிவு பெற்றெழுங்கள்!" என்கிறார் பெரியார். அதன்பின்பும் தொடர்ந்து கால் நூற்றாண்டு, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுப் பரப்புரைகளை அவர் மேற்கொண்டிருந்தார். இறுதிவரையில் அக்கொள்கையில் அவருக்குத் தளர்ச்சி ஏற்படவே இல்லை.

ஆனாலும், அக்கொள்கையை  முழுமையாகப்  பரப்புரை செய்யச் சில ஆண்டுகளை அவர் எடுத்துக் கொண்டார் என்பது உண்மைதான். சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடனோ அல்லது அதற்கு முன் 1925ஆம் ஆண்டு குடியரசு இதழ் தொடங்கியவுடனோ அவர் கடவுள் மறுப்பு, பகுத்தறிவு என்று பேசவில்லை. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளைக் கொண்டுதான் குடியரசு முதல் இதழை அவர் வெளியிட்டார். முதல் இதழின் தலைப்பில், கோயில் கோபுரம், சிலுவை, பிறை ஆகிய மூன்றும் இடம் பெற்றிருந்தன.

இவற்றையெல்லாம் இன்று சிலர் தேடிக் கண்டுபிடித்துத்தங்களைப்  பெரிய ஆராய்ச்சியாளர்கள் போல் காட்டிக் கொள்கின்றனர். இத்தனை சான்றுகளும் மறைத்து வைக்கப்பட்டவை அல்ல. அனைத்தும்  சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்திலிருந்து எடுக்கப்பட்டவைதாம். எந்தப் பழைய ஒன்றையும் அழிக்காமல் வைத்திருக்கும் நேர்மையின் பொருட்டே இன்று பெரியாரைப் பலரும் விமர்சிக்க முடிகிறது.  இன்னொன்றையும் நாம் நோக்க வேண்டும். 1925இல், எம்மதமும் சம்மதம் என்றோ,, சர்வ சமயக் கோட்பாட்டிற்கு  ஆதரவு தெரிவித்தோ பேசுவதே புரட்சிகரமானதுதான். சிலுவை, பிறையோடு கோயில் கோபுரத்தைச் சேர்த்த சித்திரத்தை ஒரு சைவ சமய அடிகளாரைக் கொண்டு வெளியிட்டதும் புரட்சிதான்.

1928 வரையில் பெரியாரின் எழுத்துகளில் கடவுளை ஏற்றுக் கொள்வது போன்ற  தொடர்கள் காணப்படுகின்றன. 1925 ஜூன் மாதம் வ.வே.சு. அய்யர் இறந்தபோது, பெரியார் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கடவுள் நம்பிக்கை பற்றிய குறிப்பு உள்ளது. 1925 முதல்  1928 வரையிலான குடியரசு இதழைத் தேடினால் 'இறை நம்பிக்கை' உடைய பல இடங்களை நம்மால் காண முடியும். இவற்றையெல்லாம் காட்டிப் பெரியாரைக் கொச்சைப்படுத்தி விட முடியுமா என்று சிலர் முயற்சிக்கின்றனர். "பெரியாரிடம் ஒவ்வொரு அணுவிலும், அங்க அசைவிலும், சொல்லிலும், செயலிலும் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வன்மத்தோடும், வக்கிரபுத்தியோடும் எழுதப்பட்டுள்ள நூல்" என்று ஒரு நூலை அடையாளம் காட்டுவார் அறிஞர் எஸ்.வி.ராஜதுரை. இன்றும் அதே வன்மத்தோடும், வக்கிரபுத்தியோடும் சிலர் நூல்களை எழுதிக்கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் பெரியாரின் புகழ் வளர்ந்து கொண்டுள்ளதே அன்றி, ஒரு சிறிதும் குறையவில்லை.

அச்சத்திலும், அறியாமையிலும் ஊறித் திளைத்துள்ள ஒரு சமூகம், எடுத்த எடுப்பிலேயே கடவுள் மறுப்பு என்னும் இடத்துக்கு வந்துவிடாது, பகுத்தறிவுச் சிந்தனைகளை ஏற்றுக் கொண்டுவிடாது என்பதை பெரியார் அறிந்திருந்தார். அதனால்தான், 17 ஆவது வயதிலேயே கடவுளை எதிர்த்துப் பேசிய பெரியார், அதனை மிக வெளிப்படையாக மக்கள் மன்றத்திற்குக் கொண்டுசெல்லத்  தன் 49ஆவது வயது வரையில் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. 

தொடங்கியபின் அதன் வேகம் சற்றும் குறையாமல் அந்தப் பரப்புரையைப் பெரியார் மேற்கொண்டார். நாட்டின் இழிவுகளுக்கெல்லாம் பகுத்தறிவின்மையே காரணம் என்பதை விளக்கினார். "சமுதாயத் துறையில் இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம்,இழிவு, தரித்திரம், மடைமை முதலிய குணங்கள், மனிதனின் குறைவினால் - பகுத்தறிவு இல்லாததால் அல்லது பகுத்தறிவைச் செவ்வனே பயன்படுத்தாதால் ஏற்பட்டவையேயன்றி, காலக்  கொடுமையாலோ, கடவுள் தன்மையாலோ இல்லை" என்றார் பெரியார்.

(தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

3 comments:

  1. ஐயா அவர்கள் எழுதியிருக்கும் இந்தப்பகுதி மிகச்சிறப்பு !! பாராட்ட வயதில்லை, வணக்கங்கள்!!

    ReplyDelete
  2. ""தன் 70ஆவது அகவை நிறைவின்போது, "நான் எனது 17ஆவது வயதிலேயே இந்தக் கடவுள்களையும், இந்தப் பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டேன்""- என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதாக நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள. பெரியாரின் 17 வயது என்பது 1906ம் ஆண்டு.

    ""பிறகு 1928 வரையில் பெரியாரின் எழுத்துகளில் கடவுளை ஏற்றுக் கொள்வது போன்ற தொடர்கள் காணப்படுகின்றன. 1925 ஜூன் மாதம் வ.வே.சு. அய்யர் இறந்தபோது, பெரியார் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கடவுள் நம்பிக்கை பற்றிய குறிப்பு உள்ளது. 1925 முதல் 1928 வரையிலான குடியரசு இதழைத் தேடினால் 'இறை நம்பிக்கை' உடைய பல இடங்களை நம்மால் காண முடியும்."" என்றும எழுதி உள்ளீர்கள்.


    இரண்டாவது உண்மை என்றால் முதலாதாக பெரியார் கூறியிருப்பது பொய் என்பது தெளிவு.

    இதன முரண்பாடுகளுக்கு நீங்கள் தந்திருக்கும் விளக்கம் ( மக்கள் எடுத்த எடுப்பிலேயே ஏற்கமாட்டார்கள்....) பெரியாரே சொன்னதா அல்லது சுபவீ அய்யாவின் ஊகமா?

    மேலும் அச்சம் , தயக்கமின்றி கருத்துகளை வெளியிட்டு வந்த பெரியாரின் இயல்புக்கு இது முரணாக அமைதிருக்கிறதே?

    இந்த முரண்பாடுகளை சுட்டிக் காட்டும் எழுத்தாளர்கள் மீது வசை மாறி ஏன்?

    ReplyDelete
  3. முந்தைய பதிவில் ஒரு சிறு தவறு. பெரியாரின் 17 வயது 1896 என்பதற்கு பதிலாக 1906 என்று பதிவாகி விட்டது. தவறுக்கு வருந்திகிறேன்.

    ReplyDelete