தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 15 October 2017

சடசடவெனச் சரியும் பா.ஜ.க



சமூக வலைத்  தளங்களிலும், ஊடகங்களிலும் தூக்கி நிறுத்தப்பட்ட பாஜகவின் பொய்யுருவம், சரியத் தொடங்கியுள்ளது.  ஒருபக்கம், மிகப்பெரிய   ஊழல்  குற்றச்சாற்று, மறுபக்கம், உள்ளாட்சித் தேர்தல்களில் மிகப் பெரிய தோல்வி என்று இருமுனைத் தாக்குதலுக்கு உள்ளாகி நிற்கிறது பாஜக. 

அமித் ஷாவின் மகன் ஜே ஷாவின் நிறுவனம், ஒரே ஆண்டில் எண்ணிப்பார்க்க முடியாத அளவு தன் வணிகத்தைப் பெருக்கி, பெரும்பொருளை லாபமாக ஈட்டியிருப்பது எப்படி என்று நாடு முழுவதும் கேள்விக்கணைகள் எழுந்துள்ளன. அவர்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கூட, அவர்களைக் கைகழுவியது போலத்தான் அறிக்கை விட்டுள்ளது. அடிப்படை ஆதாரம் இருந்தால், விசாரணை தேவைதான் என்று கூறியுள்ளது. 


பாஜகவின் தலைவர்கள் இருவர் ஊழல் குற்றச்சாற்றை விசாரிப்பதில் ஏன் தாமதம் என்று கேட்டுள்ளனர். அவர்களுள் யஷ்வந்த் சின்ஹா முதன்மையானவர். சத்ருகன் சின்ஹாவையும் ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது. அவர் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகவே இருந்தவர். அவர் உண்மைகளை ஏன் மறைக்க முயல்கின்றீர்கள் என்று நேரடியாகவே கேட்டுள்ளார்.

பாஜகவில் உள்கட்சிக் குழப்பங்கள் ஏற்பட்டு, அவை வெளிப்படவும் தொடங்கிவிட்டன. இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை தவறான பாதையில் போய்க்  கொண்டிருக்கிறது என்றும், பணமதிப்பு  இழப்பு, ஜி.எஸ்.டி. வரி ஆகியவை தற்கொலை முயற்சி என்றும், கட்சியின் முதல் வரிசைத்  தலைவர்களாக உள்ள யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, சுப்பிரமணிய சாமி, ஸ்வராஜ்யா இதழின் ஆசிரியர் ஜெகந்நாதன் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். "என் மீது நடவடிக்கை எடுத்தால், மகிழ்ச்சி அடைவேன்" என்று யஷ்வந்த் சின்ஹா வெளிப்படையாகக் கூறியபிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்க அஞ்சிக் கிடக்கிறது பாஜக. 

இந்த நிலையில்தான், பாஜக செல்வாக்குப் பெற்றுள்ள இந்தியாவின் மேற்கு மாநிலங்களில், உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் தோல்வியை அக்கட்சி பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன், மோடி, அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே, உள்ளாட்சித் தேர்தல்களில், வரலாறு கண்டிராத தோல்வியைத் தழுவினர். 

இப்போது அதனை விடப் பரிதாபமான ஒரு தோல்வி மராட்டிய மாநிலத்தில் அவர்களுக்குக்  கிடைத்துள்ளது. நான்டெட் மாவட்டத்தில் உள்ள வாஹேலா (Nanded-waghala)வில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவு 12.10.2017 மாலை வெளிவரத் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி வெற்றி முகத்தில் இருந்தது. பாஜக, சிவசேனா இரண்டுமே பெரும் பின்னடைவைச் சந்தித்தன. 

இறுதி முடிவுகள் வெளியானபோது, மாநகராட்சிக்கு இணையான அத்தேர்வுநிலை நகராட்சியில் மொத்தம் உள்ள 81 இடங்களில் 69 இடங்களைக் கைப்பற்றி, காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மீதமுள்ள இடங்களில் சிவசேனாவும், சுயேட்சைகளும் வென்றுள்ளனர். 

வாஹேலா என்பது, கோதாவரி நதியின் தென்கரையில் உள்ள, மரத்வாடாவின் மூன்றாவது பெரிய நகரம். இந்தியாவிற்கே பருத்தியை வழங்கும் பூமி அது. தொழில்துறையில் குறிப்பிடத்தக்க ஊர் அது! 

செல்வாக்கு மிகுந்த குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலேயே பாஜக தோல்வி அடைந்திருப்பது, மோடியின் சரித்திரம் முடிவுக்கு வந்து கொண்டிருப்பதையே காட்டுகின்றது.  


4 comments:

  1. தனி நபர்களுக்கு பிரச்னை,தெளிவில்லா பயம், நம்பகத்தன்மை உருவாகும் சூழ்நிலையை உருவாக்கினால், எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சியை தக்க வைப்பதிலும்,மீண்டும் வெற்றி பெறுவதிலும் பிரச்னை தானாகவே வந்துவிடும்.

    ReplyDelete
  2. தமிழகத்தில் பாஜக சடசடவெனச் சரிய வாய்ப்பை இல்லை காரணம் இங்கு வளர்ந்து இருந்தால்தானே சரிந்து விழுவதற்கு

    ReplyDelete
  3. இரத்தினவேல்17 October 2017 at 14:29

    எல்லாரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

    ReplyDelete
  4. நீங்கள் பிஜேபியை எதிர்ப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால தமிழர்களுக்கு எதிராக பல நாசகார கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தமிழகத்தில் புரிந்துணர்வு மேற்கொண்ட 2 லட்சம் தமிழர்களை அழித்த காங்கிரசின் வெற்றியை ரசிப்பது வேதனையாக உள்ளது. நாளைய இந்தியா கம்யூனிசத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களை அடக்கி வைக்க வேண்டும் என்றால் கம்யூனிசம்தான் ஒரே வழி. எவனோ ஒருவன் என்னை பயன்படுத்தி பணக்காரன் ஆவதை நான் ஏன் வரவேற்க வேண்டும் என்ற எண்ணம் சிந்திக்கக் கூடியவர்களுக்கு வந்துவிட்டது என்பதை உங்களை போன்றவர்கள் உணர வேண்டும். கேரளா மற்றும் சைனா அனைத்து விஷயங்களிலும் முன்னனியில் இருந்து இந்தியாவை கம்யூனிசம் நோக்கி இழுக்கிறது. திருமாவளவன் அவர்கள் பினராயி விஜயன் போன்ற தலைவர்களை பயன்படுத்தி தமிழகத்தில் கம்யூனிசத்தை வலுப்படுத்த வேண்டும்.

    ReplyDelete