தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 1 December 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (13)


புலிகளுடன் தொடர்பில்லை என்கிறார் வைகோ 


வைகோ மிக உறுதியான புலிகளின் ஆதரவாளர் என்ற நம்பிக்கை, தி.மு.க.விலிருந்த ஆயிரக்கணக்கான புலிகள் ஆதரவு இளைஞர்களை அவர் பக்கம் திருப்பியது. கட்சிக்கு வெளியில் இருந்த என் போன்றோர் கூட வைகோவினால் பெரிதும் ஈர்க்கப்பட்டோம்.  அடுத்த எம்.ஜி.ஆர். என்று கூட அவரைக் கருதினோம். அப்போது நாங்கள் நடத்திக் கொண்டிருந்த 'இனி' இதழில், கவிஞர் அறிவுமதி,

"கலைஞர் 
தலைவர்களை உருவாக்கும் தலைவர் 
அன்று எம்.ஜி.ஆர் 
இன்று வைகோ"

எனக் கவிதை எழுதினார். தி.மு.க.வின் எட்டு மாவட்டச் செயலாளர்கள் வைகோவை ஆதரித்தனர். அவ்வளவுதான், தி.மு.க. வின் கதை முடிந்தது என்று நான் உட்படப் பலரும் கருதினோம். ஈழத்திற்கும், புலிகளுக்கும் ஆதரவாகத் தி.மு.கழகம் சார்பில் வைகோ செயல்பட்டார் என்பதே மறக்கடிக்கப்பட்டு, வைகோ என்னும் தனி மனிதர்தான் அனைத்துச் செயல்களையும் செய்தவர் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. அதனால் அவரைத் தமிழ்நாட்டின் விடுதலைப் புலி என்றே இளைஞர்கள் கருதி, அவர் பின் சென்றனர். 

எனினும் அவர் உடனடியாகத் தனிக் கட்சி தொடங்கிடவில்லை. தாங்கள்தான் உண்மையான தி.மு.க. என்றார். கொடியும் சின்னமும் எங்களுக்கே சொந்தம் என்று அறிவித்தார். அறிவாலயத்தைக் கைப்பற்றும் முயற்சிகள் நடப்பதாகச் செய்திகள் கூறின. எம்.ஜி.ஆர் கூட இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டதில்லை. 


வைகோவை மேடையில் வைத்துக்கொண்டு, அவரது ஆதரவாளர் சிலர் மிகக் கடுமையாகப் பேசினர். வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், அப்போது நெல்லை மாவட்டச் செயலராக இருந்த இலக்குமணன், 

"கலைஞர் வீட்டுப் பெண்கள் விரைவில் 
வெள்ளைச் சேலை கட்ட வேண்டி இருக்கும்"

என்று பேசினார். அதற்குக் கலைஞர், 15.11.93ஆம் நாளிட்ட முரசொலியில், "வெள்ளைச் சேலையே அங்கு தேவை இல்லை" என்னும் தலைப்பில் உருக்கமாக விடை எழுதினார். ஆனால் வைகோவோ ஒரு பெரிய தந்திரத்தைக் கையாள முயன்றார். அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் கலைஞரையும், அவரது குடும்பத்தினரையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். வைகோவோ கலைஞரை அளவு கடந்து பாராட்டுவார். அவருடைய பேச்சை மட்டும் நாளேடுகள் பெரிதாக வெளியிடும். அதிலும் குறிப்பாகத் தினமணி தினமும் அவரைப் பற்றிய செய்திகளை முதல் பக்கச் செய்தியாக ஆக்கிக் கொண்டிருந்தது. அப்போது தினமணியின் ஆசிரியராக இருந்தவர் மாலன். முதல் பக்கத்தில் தினமணி வெளியிட்டிருந்த வைகோ பேச்சு ஒன்றின் சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன:
  
"என்னை வளர்த்து ஆளாக்கிய எனது உயிரினும் மேலான தலைவர் கருணாநிதி, என் சிந்தை, அணு ஒவ்வொன்றிலும் இமைப்பொழுதும் நீங்காது, நீக்கமற நிறைந்து, என்னை இயக்கிவரும் ஜீவனும், உயிர் சக்தியும் ஆவார்."      
(தினமணி - 04.10.1993 - பக்.1)          

வைகோவின் இவை போன்ற உரைகளைப் படித்துவிட்டு, 'அடடா, தலைவர் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார், இவரைப் போய்க் கட்சியை விட்டு விலக்கப் பார்க்கின்றனரே என என்னைப் போன்றவர்கள் வருத்தப்பட்டதுண்டு. ஆனால் அந்த மேடையில் மற்றவர்கள் எவ்வளவு வசை பாடினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அவற்றை எல்லாம் நாளேடுகள் வெளியிடுவதுமில்லை.

ஆனால் கலைஞர் தனக்கேயுரிய பாணியில் சில செய்திகளை முரசொலியில் வெளியிட்டார். வைகோவைத் தீவீரமாக ஆதரித்த மாவட்டச் செயலாளர் டி.எ.கே. இலக்குமணன் சில மாதங்களுக்கு முன் கட்சித் தலைமைக்கு எழுதியிருந்த ஒரு கடிதத்தை முரசொலியில் கலைஞர் வெளியிட்டார். வைகோவின் ஆதரவாளர்களில் ஒருவரான கே.கே. சாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து வைகோ, இலக்குமணன் ஆகியோர் கண்டித்துப் பேசினர்.  ஆனால், வைகோ பெயரில் நற்பணி மன்றம் தொடங்கியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி இலக்குமணன் சில மாதங்களுக்கு முன் எழுதிய கடிதமே, கலைஞரால் வெளியிடப்பட்டது.  எனவே வைகோ போன்றவர்களின் இரட்டை வேடம் மெல்ல மெல்ல வெளியாயிற்று.

எல்லாவற்றையும் விட, தி,மு.கழகத்தில் தனக்கு நெருக்கடி முற்றியபோது, வைகோ வெளியிட்ட அறிக்கை அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடியது. தமிழ் ஈழத்தை மட்டும்தான் நான் ஆதரிக்கின்றேனே தவிர புலிகளுக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றார் வைகோ. 14.10.1993 அன்று அவருடைய அறிக்கை எல்லா நாளேடுகளிலும் காணப்பட்டது வழக்கம்போல், தினமணி அச் செய்தியைத் தன் ஏட்டின் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. 
                   
செய்தியாளர்கள் விடாமல் அவரிடம் வினாக்களை எழுப்பினர். விடுதலைப் புலிகளுடன் தொடர்பை அகற்றிக் கொண்டது பற்றி ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று கேட்டனர். அதற்கு வைகோ சொன்ன விடை, இன்றுவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும். வைகோ சொன்னார்" 
                     
"தொடர்பு இருந்திருந்தால்தானே, தொடர்பு அகன்றது என்று சொல்லமுடியும்? எந்தக் காலகட்டத்திலும் விடுதலைப் புலிகளுடன் எனக்குத் தொடர்பு இருந்ததில்லை"

இந்த விடைக்குப் பிறகும் கூட  வைகோவின் 'நேர்மையை' அன்று புரிந்து கொள்ள முடியாதவர்களாக என்னைப் போலப் பலர் இருந்தனர். இவையெல்லாம் ராஜதந்திரம்  என்று சொல்லப்பட்டது. வைகோவின் ராஜதந்திரங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த யாரும், கலைஞரின் சிறு மாற்றுக் கருத்தையும்   ஏற்கத் தயாராக இல்லை. 

எனினும் செய்தியாளர்கள் வைகோவிடம் தொடர்ந்து வினாக்களை எழுப்பினர். புலிகளோடு எந்தத் தொடர்பும் இல்லையென்றால், பிறகு எதற்கு ஈழம் சென்று புலிகளின் தலைவர்களைச் சந்தித்துத் திரும்பினீர்கள் என்ற கேள்விக்கு தமிழ் ஈழக் கோரிக்கையை ஆதரிப்பதற்குத்தான் என்றார். 

தமிழ் ஈழத்தைக் கூடத் தான் ஏன் ஆதரிக்கிறேன் என்பதற்கு அவர் சொன்ன விளக்கம்தான், கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. 
             
1984 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற தி.மு.க  பொதுக்குழுவில் தனித் தமிழ் ஈழத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். எனவே தி.மு.க.வின் வழியைத்தான் நான் பின்பற்றுகிறேன் என்று அவர் கூறுவது நமக்குப் புரிகிறது.

தான்தான் தி.மு.க. என்றும் தடை செய்யப்பட்ட இயக்கத்தைத் தான் ஆதரிக்கவில்லை என்றும் அவர் நிறுவ முயன்றார். அந்தப் போலித்தனத்தை யாரும் கண்டிக்கவில்லை. ஆனால், ராஜீவ் கொலைக்குப் பிறகு, நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை, ஈழக் கோரிக்கையை மட்டுமே ஆதரிக்கிறோம் என்று கலைஞர் கூறுவதை அனைவரும் கண்டிக்கின்றனர், துரோகம் என்கின்றனர் 
               
இன்றைக்கும் கலைஞர் சொல்லும் ஒரு சில கூற்றுகளை மிகக் கடுமையாகக் கண்டிக்கும் ஈழ ஆதரவாளர்கள், அதனையே வைகோவும் நெடுமாறனும் கூறும்போது வரவேற்கின்றனர்  எடுத்துக்காட்டிற்கு ஒன்றைப் பார்க்கலாம்.

'அரசியல் என்னும் இதழில், புலவர் புலமைப்பித்தன் அண்மையில் ஒரு தொடர் எழுதி முடித்துள்ளார். அத் தொடரில், டெசோ முன்வைக்கும், ஐ.நா. முன்னிலையிலான வாக்கெடுப்பு என்னும் கோரிக்கையைக் கூட அவர் மிகக் கடுமையாகச் சாடுகின்றார். கலைஞர் எதைச் சொன்னாலும் அதைத் தாக்க வேண்டும் என்று கருதுகின்ற 'பெரிய மனிதர்களில்' புலமையும் ஒருவர். இதோ அவரது வரிகளிலேயே அவர் விமர்சனத்தைப் படியுங்கள்:

"வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறார். மத்திய அரசு இதற்குத் துணை நிற்க வேண்டும் என்கிறார். இவரது மூளையில் விஷப் புழுக்கள் ஊறிக் கொண்டிருக்கின்றன 
                         
என்ன வாக்கெடுப்பு நடத்துவது? எந்த மக்களை வைத்து வாக்கெடுப்பு நடத்துவது? லட்சக் கணக்கில் இறந்து போனவர்களைஎழுந்து வந்து வாக்குப் போடச் சொல்லுவதா? உலகத்தின் மூலை  முடுக்கெல்லாம் புலம் பெயர்ந்து போய, நலம் இழந்து போய் , , அலைந்து  திரிகின்றார்களே அவர்களை எல்லாம் ஈழத்துக்கு அழைத்து வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளச் சொல்லுவதா? என்ன வாக்கெடுப்பு நடத்துவது?
                           
தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு - இப்போது  கண்டுபிடித்திருக்கிறார் இந்த அரசியல் மேதை, தமிழறிஞர்,தமிழர்களின் காவல் தெய்வம். முன்னர் எப்போதாவது தமிழ் ஈழம்தான் தீர்வு என்று பேசியிருக்கிறாரா?"

பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கலைஞர் மட்டும்தான் சொல்கின்றாரா? வைகோவும், நெடுமாறனும் சொல்லவில்லையா? புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் அக்கோரிக்கையை முன்வைக்கவில்லையா? இதோ 'டெக்கான் ஹெரால்ட்' (http://www.deccanherald.com/content/44433/vaiko-bats-referendum-eelam.html) இதழில் வைகோ , பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி விடுத்துள்ள செய்தியைப் பாருங்கள். ஆனால் அவர் மூளையில்  விஷப் புழுக்கள் ஊறுவதாகப்  புலமைப்பித்தன் கூறி நெளியவில்லை. யார் மூளையில்  எல்லாம் விஷப் புழுக்கள் ஊறிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காலம் சொல்லும்.


அடுத்ததாக, கலைஞர் ஒருநாளும் தமிழ் ஈழம்தான் தீர்வு எனக் கூறவில்லை என்கிறாரே, இதனை விடக் கலப்படமற்ற பொய் ஒன்று இருக்க முடியுமா?  இத் தொடரில் பல இடங்களில், கலைஞர் தமிழ் ஈழம் கோரியுள்ளதைச் சான்றுகளுடன் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். வைகோவே புதுக்கோட்டைத் தீர்மானத்தைத்தான் சுட்டிக் காட்டுகின்றார் என்பதையும் பார்த்தோம். இத்தனை உண்மைகளையும் மறைத்துப் பொய் சொல்லித் திரியும் புலவர்களை எந்தக் கணக்கில் வைப்பது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

போகட்டும், வைகோவின் நிலை என்ன ஆனது என்பதைப் பார்க்கலாம். 73இல் கட்சி தொடங்கி, 77இல் ஆட்சிக்கு வந்துவிட்ட எம்.ஜிஆர் போல,  94இல் கட்சி தொடங்கிய தானும், 96இல் ஆட்சிக்கு வந்து விடலாம் என்றுதான் வைகோ நினைத்திருந்தார். ஆனால், 96 தேர்தலில், வைகோவின் ம.தி.மு.க ஒரே ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதுதான் வரலாற்றில் பெரிய சோகம்.
                        
1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில், நான்கு அணிகள் மோதின. தி.மு.க., தமிழ்நாடு மாநிலக் காங்கிரஸ், இந்தியப் பொதுவுடமைக் கட்சி ஆகியன ஓர் அணியாகவும், அ.தி.மு.க. காங்கிரஸ் ஓர் அணியாகவும் களத்தில் இறங்கின. ம.தி.மு.க., சி.பி.எம் ஆகிய கட்சிகள் மூன்றாவது அணியாகவும், பா.ம.க., வாழப்பாடி தலைமையிலான திவாரி காங்கிரஸ் ஆகியன நான்காவது அணியாகவும் தேர்தலில் நின்றன.

1996 மே 2 ஆம் நாள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில் தி.மு.க. கூட்டணி 221 இடங்களில் வெற்றி வாகை சூடியது. தி.மு.க மட்டுமே  173 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அ.தி.மு.க நான்கு இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை. 177 இடங்களில் போட்டியிட்டு 16 லட்சத்திற்கும் குறைவா வாக்குகளை மட்டுமே பெற்ற ம.தி.மு.க. ஓர் இடத்தில் கூட வெற்றியை எட்டிப் பிடிக்கவில்லை. விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட வைகோவே வெற்றி வாய்பை இழந்தார். ஆனால் அக் கூட்டணியில் இருந்த பிற கட்சிகள் மூன்று இடங்களில் வெற்றி பெற்றன. பா.ம.க.விற்கு 4 இடங்கள் கிடைத்தன. அதுதான் பா,ம,க, தனித்துப் போட்டியிட்ட கடைசித் தேர்தல். அதன் பிறகு, இரண்டு 'திராவிடக் கட்சிகளுள்' ஒன்றுடன் கூட்டணி அமைத்தே அக்கட்சி போட்டியிட்டது. இப்போது மீண்டும் திராவிடக் கட்சிகளுடன் இனிக் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது. (இந்த நிலைப்பாட்டில்  அவர்கள் மாறாமல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பம்)
                          
1993 இல் சட்டென்று மேல் எழுந்த வைகோவின் செல்வாக்கு, 96 தேர்தலுக்குப் பின் சிறிது சிறிதாகத் தேயத் தொடங்கியது.


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 
  




16 comments:

  1. புலிகளோடு எப்போதும் எந்த தொடர்பும் இல்லை என்று அன்று கூறிவிட்டு இன்று தான் தான் புலிகளின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்பதை போல வேடமிட்டுக் கொண்டிருக்கும் வைகோவின் முகத்திரையை தக்க ஆதாரத்தோடு கிழித்திருக்கிறீர்கள் அய்யா...

    ReplyDelete
  2. அருமையான ...ஆதாரங்களுடன் கூடிய பதிவு .

    ReplyDelete
  3. வைகோ அவர்கள் புலிகளுடன் தொடர்பில்லை என்று கூறியதை ஆதாரத்துடன் கூறியதை கண்டு வியக்கமலும் நம்பாமலும் இருக்க முடியவில்லை.இருப்பினும் , அய்யா அவர்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.என்ன தான் தி.மு.க. மற்றும் கலைஞர் அவர்கள் மீது இருக்கும் "ஈழ மக்களுக்கு எதிரானவர்கள் " என்ற கரையை போக்கும் பொருட்டே இந்த தொடர் எழுதப்பட்டாலும் , கலைஞர் மற்றும் தி.மு.க வை தவிர ஈழத்துக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் வேறு எவரும் ஒன்று இரண்டு போரட்டங்களை நடத்தியதைத் தவிற பெரிதாக எதுவும் செய்யவில்லை என்னும் கருத்தை முன்வைப்பதை போல் தோன்றுகிறது .ஈழம் குறித்தும் , விடுதலைப்புலிகள் குறித்தும் வைகோ அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பை வெளியிட்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தி.மு.க சார்பில் தான் அவர் அங்கு உறுப்பினராகி பணி செய்தார் என்று இருந்தாலும் , வைகோவிடம் இருந்த தனி தன்மையால் தான் அவரால் தொடர்ந்து 18 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடிந்திருக்கின்றது என்பதை அய்யா அவர்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இல்லாவிடில் வைகோ அவர்களைத்தவிர வேறு ஒருவரை உறுப்பினராக ஆக்கி தி.மு.க ஆழகு பார்த்திருக்க முடியும்.உண்மையில் தி.மு.க வால் வைகோ பலன் அடைந்தார் என்பதை மறுக்க முடியாது.அதே சமயத்தில் வைகோவாலும் தி.மு.க சிறிதளவேனும் வலு பெற்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.அப்படி இருக்கையில் வைகோ அவர்கள் கலைஞருக்கு எதிராக இருக்கும் ஒரே காரணத்துக்காக , அவர் ஈழத்துக்கு ஆதரவாக செய்த செயல்களை மறைத்து இருட்டடிப்பு செய்வது ஏன் என்று புரியவில்லை. ஒரு வேலை , அரசிய சூழல் வேறாக இருந்து கலைஞரும் , வைகோவும் ஒரே அணியில் இருந்திருந்தால் , வைகோ அவர்கள் செய்த தவறுகளை விடுத்து அவர் ஆற்றிய உரைகள் மட்டும் இந்த தொடரில் இடம் பெற்றிருக்குமோ என்னமோ , தெரியவில்லை.முடிந்த அளவு ஈழத்தின் நலனுக்காக அனைத்து அரசியல் தலைவர்கள் ஆற்றிய பணிகளை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இல்லாவிடில் என்னை போன்றோரால் இந்த தொடர் "ஈழம் தமிழகம் நான்" என்று இல்லாமல் "ஈழம் தமிழகம் கலைஞர் " என்று தான் எடுதுக்கொள்ளவேண்டியதாகிவிடும்.

    மேலும் 1996 ஆம் ஆண்டு , தேர்தலில் , சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களின் பங்கு எவ்வளவு என்பதை அனைவரும் அறிவர். அந்த அலையில் வைகோ அவர்கள் அடித்து செல்லப்பட்டார் என்பது உண்மை. ஆனால் பெருந்துறை'இல் நடைபெற்ற இடை தேர்தலில் , தி.மு.கவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி , ம.தி.மு க . இரண்டாம் இடத்திற்கு வந்தது என்பது உண்மை அதன் பிறகு ம.தி.மு.க தேய் பிறை போல் கரைந்து வருகின்றது என்பது உண்மை தான் .வை.கோ. அவர்கள் தி.மு.க வின் அண்ணா அறிவாலயத்தை முற்றுகை இட்டு , தாங்கள் தான் உண்மையான தி.மு.க என்று நிரூபிக்க முற்பட்டதற்கு தக்க பதிலடியாகத்தான் தான் 1996-2011 வரையில் ம.தி.மு.க வை உடைக்க பல முயற்சிகள் நடந்ததோ ? போட்டி ம.தி.முக , மந்திரி பதவி ஆசை சிலருக்கு காட்டப்பட்டதோ என்ற கேள்விகள் இயற்கையாகவே எழுகின்றன. மேலும் 1994 ஆம் ஆண்டு வைகோ அவர்கள் கட்சியை விட்டு நீக்கிய சொன்ன குற்றசாட்டுகளை , தி.மு.க தொண்டர்கள் நம்பி இருந்தால் , இந்நேரம் வை.கோ அவர்கள் , சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்க முடியுமா ? என்ற கேள்வியும் எழுகிறது .இந்த கேள்வி இங்கு பொருத்தமாக இருக்காது என்று தெரிந்தும் அய்யா அவர்கள் ம.தி.மு.க வை பற்றி குறிப்பிட்டதால் , இதை கூற வேண்டியாதாக நினைத்தேன் .


    வைகோ அவரகளின் பேட்டி : http://www.youtube.com/watch?v=2wOzED5jOiI&NR=1&feature=endscreen


    நன்றி
    ரகு . தே

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ரகு அவர்களே, உங்கள் வினாவிற்கு நான் ஏற்கனவே ஒருமுறை விடை கூறி உள்ளேன் என்று நினைக்கிறேன். அய்யா நெடுமாறன், வைகோ ஆகியோரின் ஈழ ஆதரவுப் பணிகளை மறைப்பது என் நோக்கம் இல்லவே இல்லை. ஆனால் அவர்கள் செய்துள்ள பணிகள் இங்கே ஆயிரம் முறை கூறப்பட்டுள்ளன. சில வேளைகளில் சற்று மிகையாகக் கூடச் சொல்லப்பட்டுள்ளன. அதே நேரம், தி.மு.க.வின் ஈழ ஆதரவு நிலை அனைத்தும் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நில்லாமல், அவை அனைத்தும் எதிர் நிலையிலும் காட்டப்பட்டுள்ளன. அதனால் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொண்டுவரும் நோக்கமே இத் தொடரில் மேலோங்கி நிற்கின்றது என்பதை உங்களைப் போன்ற நண்பர்கள் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.

      Delete
    2. மதிப்புற்குரிய சுப.வீ அய்யா அவர்களே,தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் வாதிகள் ஈழ மற்றும் புலிகளின் ஆதரவானவர்கள் தான்.சில சூழ்நிலைகளில் அவர்களின் நிலைப்பாட்டின் வீரியமும் தடுமாற்றங்களும் நிகழ்ந்திருக்கும்.அது நிச்சயம் குற்றம் ஆக கருத முடியாது.அவர்கள் அரசியல் நிலைப்பாடு ஒரு காரணியாக இருந்திருக்கும்.இங்கே வோட்டு வாங்க வேண்டுமென்றால்,ஈழமும்,தமிழும் எவருக்கும் தேவை.ஆனால்,கலைஞர் மட்டுமே தன் குதிரைகளுக்காக இறுதி போரில் வாய் மூடி மௌனியாக இருந்தார்.இதை விட அவரின் தகுதிக்கு மிகவும் குறைவான சில நாடகங்களையும் நடத்தினார்.நாங்கள் ஆதரவை விளக்கி கொண்டாலும்,மைய அரசுக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை,அதனால் எந்த பயனும் இல்லை என்றார்.ஆனால் இவர் அதை செய்திருந்தார் என்றால் இப்பொழுது அவரின் கண்ணீரை நம்பியிருப்போம்.தன்னுடைய தமிழ் ஈழ உணர்வை நிலைபடுதிகொள்ள,எதிர்ப்பை பதிவு செய்ய இதை விட நல்ல சந்தர்ப்பம் எந்த அரசியல்வாதிகளுக்கும் கிட்டஆத ஒன்று.ஆனால் எதற்கு அதை செய்யவில்லை என்பது கனிமொழி,ராஜா,அழகிரி,தவிர தமிழகத்தில் உள்ள பச்சை குழந்தைக்கு கூட தெரியும்.கலைஞரை மதிக்கிறோம்,போற்றுகிறோம்,ஆனால் நம்ப மாட்டோம்.சுப.வீ அவர்களை,மதிக்கிறோம்,நம்புகிறோம்,ஆனால் ஈழ பிரச்னையில் கலைஞர் ஆதரவு நிலைபாட்டை மன்னிகமட்டோம்.நீங்களே சொன்னிர்கள் என்னை எதிர்பவர்கள் நான் கலைஞருடன் இருப்பதால் என்னை எதிர்கிறார்கள் என்று.தெரிந்தும் தொடர்வது ஏன்?உங்களுக்கு எந்த பிணைப்பும் இருக்கவேண்டிய அவசியம் இல்லையே?நிறைவாக இந்த தலைமுறையில் எதனை பேர் உங்களின் பகத் சிங் புத்தகத்தை படித்து சமூக போராட்டத்திற்க்கு வந்தார்கள் என்று தெரியாது?ஆனால் 1995 களில் அதை படித பொழுது ஒரு முழு இரவு நான் தூங்கிடவிலை.அது ஒருவரின் வாழ்க்கை குறிப்பையும் தாண்டி பல சமூக அரசியல் சிந்தனைகளையும் தூண்டியது.நீங்கள் இந்த சமூகத்திற்கு,இந்த தலைமுறை இளைங்கர்களுக்கு செய்யவேண்டியது இதை தான்.நாங்கள் உங்களை வைத்திருப்பது வேறு ஒரு தளத்தில்.கலைங்கருக்காக உங்களை சுருக்கிகொண்டதுபோதும்.
      வினோசுப்ரா@வினோத்குமார்.வி.எம்.எஸ்.(ஈழதமிழ ர்களுக்காக,புலிகளின் எழுச்சிக்கு முன்னரே எங்கள் குடும்பம் ஆதரவு கொடுத்து எத்தனையோ இழந்திரிகிறோம்.அதற்க்கு கூட நாங்கள் வளர்ந்த பின் வருதபடதில்லை.ஆனால் இன்றைய நிலையில் எவரும் இங்கே நம்பிக்கைக்குரியவர்கள் என்பதை ஒவ்வ்ருவராக காட்டி கொண்டிருக்கிராகள் என்பதே வருததற்குரிய விடயம்.)

      Delete
    3. மரியாதைக்குரிய சு ப வீ அவர்களே இருபது வருடத்திற்கு முன்னைய வை கோ வின் அறிக்கையை காட்டுகிறீர்கள் அன்றைய கால பகுதி தொடர்பில் சொல்லாமல் தலைவர் சில வருடங்கள் முன்னர் ராஜபக்க்ஷ வை பற்றி சொல்லிய பேச்சை காட்டி தலைவரை குறை சொல்ல முடியுமா அல்லது ராஜபக்ஷவை நியாய படுத்த முடியுமா ??? விடுதலை புலிகளால் பலமாக நம்ப பட்ட தமிழக அரசியல் தலைவர்களில் முதன்மையானவர் . கருணாநிதி பற்றி நேரடியாக ஒரே கேள்வி கேட்க ஆசை (நீங்கள் அவரை ஆதரிப்பதால் ) முடிந்தால் சொல்லுங்கள் ,உங்கள் புலமையால் தவிர்க்க பார்த்தல் அது உங்களிற்கு தான் களங்கம் .கருணாநிதி நேர்மையானவரா ??? இல்லை என்பது உங்களின் பதிலாக அமையும் என்பது எனக்கும் தெரியும் .............அவரை நியாய படுத்த முனைந்தால் ??? எத்தனை பிழைகளை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி செய்கிறார்கள் ??? .ஈழ படுகொலைக்கு கருணாநிதி தான் காரணம் என்று சொல்வது அபத்தம் ஆனால் அவரால் செய்ய பட்டு இருக்க வேண்டிய கடமையை அவர் அன்று செய்து இருக்கவில்லை ...........ஈழ மக்கள் கருணாநிதியிடம் எதிர்பார்த்தார்கள் ,ஜெயலலிதாவிடம் எதிர்பார்க்கவில்லை .அன்று எதிர்கட்சியில் கருணாநிதி இருந்து இருந்தால் ஒருவேளை தனக்கு உரிய கடமையை சரியாக செய்து இருப்பார் என்பது எனது நம்பிக்கை .

      Delete
    4. கலைஞர் போராட்டத்தை அறிவித்தால் சிங்களவன் ராஜபக்சே கொக்கரிக்கிறான் ,வைகோ நண்பர்கள் எந்த போராட்டத்தை அறிவித்தாலும் அதை ராஜபக்சே கண்டுகொள்வதில்லை .

      Delete
  4. "புலிகளின் புதல்வர் வைகோ" என்ற போலி விஷக்கூற்றை உடைத்தெறிந்து உள்ளார் அய்யா சுப.வீ

    ReplyDelete
  5. ஐயா திரு ரகு அவர்களுக்கு தாங்கள் அளித்துள்ள பதில் அற்ப்புதம்

    ReplyDelete
  6. வரலாற்று உண்மைகளை விளக்கியதற்கு நன்றி!

    ReplyDelete
  7. திரு. சுப. வீ. அவர்கள் இத் தொடரில் சரியான தகவல்களை பதிவு செய்பவராக இருந்தால் எனது கருத்துகளை வெளியிட வேண்டும்.

    ReplyDelete
  8. அன்றைய சூழலுக்கு ஏற்ப கலைஞர் சொல்லி வைகோ விடுத்த அறிக்கை தான் இது . எப்பொழுதும் கலைஞர் இப்படி சொல்வதும் செய்வதும் அவரது பழக்கம். சமீபத்தில் பழனிமாணிக்கம் மற்றும் T . R பாலுவுக்கும் சண்டை மூட்டிவிட்டு பழநிமாணிக்கத்திடம் கடிதம் எழுதி வாங்கியவர் தான் இந்த கருணாநிதி. ஏற்கனவே திரு வைகோ அவர்கள் விடுதலைபுலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிகிறேன் நாளையும் ஆதரிப்பேன் என்று பாராளுமன்றத்திலும் , போடா நீதி மன்றங்களிலும் பதிவு செய்தவர்தான் இந்த வைகோ. இது இந்த சுபவீக்கு தெரியாதா ?

    ReplyDelete
  9. தி.மு. கழகத்தையே உயிராக நேசித்தவர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் மீண்டும் ஆட்சியைப் பிடித்த கலைஞர் கருணாநிதி அவர்கள்,பேரறிஞர் பெருந்தகை கண்ட தி.மு.கழகத்தை தன் குடும்பத்தினர் கையில் தருவதற்காக திறமை வாய்ந்த, தி.மு.க.விற்காக நாளெல்லாம் உண்மையாக உழைத்த ஒரு நல்ல மனிதரான வைகோ அவர்களைத் திட்டமிட்டு பொய்ப்பழி சுமத்தி வெளியேற்றியவராவார். கலைஞர் கூறிய அந்த பொய் பழியை துடைத்தெறிந்து இன்று லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் தலைவராக ஏற்றுக் கொண்ட அண்ணன் வைகோவை திமுகவிலிருந்து வெளியேற்றிய பின் அவரின் இடத்தை நிரப்ப இது நாள் வரை திமுகவில் யாருமே இல்லையே ஏன் ? இந்த வரலாற்று நிகழ்வையும் குறிப்பிடுவீர்களா அண்ணன் திரு. சு. ப. வீ அவர்களே.

    ReplyDelete
  10. எங்களை போன்றவர்களின் கருத்துகளை வெளியிடமாட்டீர்கள் என்பது தெரியும். இருந்தாலும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன். நன்றி

    ReplyDelete
  11. என் தொடரைப் படித்து நேரம் ஒதுக்கிக் கடிதம் எழுதியுள்ள நண்பர்களுக்கு முதலில் என் நன்றி. நான் காட்டியுள்ள ஆதாரங்களை எந்த சான்றும் கொண்டு மறுக்காமல், அந்த அறிக்கை தி.மு.க.வில் இருந்தபோது எழுதப்பட்டது என்பதால், அதைக் கருணாநிதியே எழுதிக் கொடுத்திருப்பார் என்று சொல்வதெல்லாம் பொருத்தமானது அன்று. அப்படிச் சொல்வது வைகோவிற்கும் பெருமை சேர்க்காது.

    தி.மு.க.விற்காக வைகோ உழைத்தார் என்று சொல்லும் நண்பர்களே, தேர்தலில் கூட நிற்கச் சொல்லாமல், 18 ஆண்டு காலம் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது தி.மு.க.வும், தலைவர் கலைஞரும்தான் என்பதைக் கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

    காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைத்திருப்பதைக் கண்டிக்கின்றீர்கள். ஆனால் ஈழத்திற்கும், புலிகளுக்கும் நேர் எதிரான ஜெயலலிதாவுடன் வைகோ வைத்திருந்த கூட்டணி பற்றி ஏன் நீங்கள் எதுவும் பேசுவதில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி அவரோடுதான் என்பது ஊரறிந்த உண்மைதானே!

    நாம் அரசியலில் வேறுபட்டு நின்றாலும், உங்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள நான் என்றும் தயங்க மாட்டேன். நன்றி

    ReplyDelete