தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 3 March 2016

அரசியல் மேடை - 6

தோழர்களின்  'யுத்த தந்திரம்’


சென்ற ஆண்டின் இறுதியில் நடைபெற்ற இந்தியப் பொதுவுடமைக் கட்சி(எம்)யின், இந்திய அளவிலான பொதுக்குழுவில், இனி எக்காரணம் கொண்டும் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டு வைப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்போது 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. அவற்றுள் அக்கட்சி செல்வாக்குப் பெற்றுள்ள கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் அடங்கும். 2011 வரை இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் அவர்களுக்கான எதிர்க்கட்சி.  இப்போது மேற்கு வங்கத்தில் நிலை மாறியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வளர்ந்து ஆட்சியைப் பிடித்து விட்டது.


1977 முதல் அங்கே சி.பி.எம். தலைமையிலான இடதுசாரிக் கட்சியினர்தான் ஆட்சியில் இருந்தனர். 2000 நவம்பர் வரையில் ஜோதி பாசு முதலமைச்சராக இருந்தார். உடல்நலம் காரணமாக அவர் ஓய்வெடுத்த பின், புத்த தேவ் பட்டாச்சாரியா அப்பொறுப்புக்கு வந்தார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி தோன்றிய பிறகு, இடதுசாரியினருக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. 2011 தேர்தலில் திரிணாமுல் கட்சியும் காங்கிரசும் கூட்டு வைத்துப் போட்டியிட்டனர். அதன் விளைவாக அங்கு 34 ஆண்டுகால இடதுசாரியினர் ஆட்சி முடிந்து புதிய ஆட்சி உருவாயிற்று. திரிணாமுல்  184 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும் வெற்றி பெற்றன. இடதுசாரிக் கூட்டணி 62 இடங்களைத்தான் பிடிக்க முடிந்தது.

இப்போது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. காங்கிரசும் அதற்குத் தயாராக உள்ளது. ஆனால் அங்கு கூட்டணி வைத்தால், அது கேரளாவில் சிக்கலை உருவாக்கும். கேரளாவில் காங்கிரசுக்கும், இடதுசாரியினருக்கும்தான் போட்டி. என்ன செய்வதென்று புரியாமல் தோழர்கள் தடுமாறுகின்றனர்.

மேற்கு வங்கத்தைச்  சேர்ந்த கவ்தம் தேவ் போன்றவர்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றனர். ஆனால் கேரளாவைச் சேர்ந்த எம்.எ. பேபி போன்ற மூத்த தலைவர்களோ அதனை எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டிலும், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை இடதுசாரித் தோழர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆனால் மேற்கு வங்கத்தில் கூட்டணி வைத்துக் கொள்வது பற்றி பேசத் தயங்குகின்றனர்.

நம் கம்யூனிஸ்ட் தோழர்களுக்குத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் பிற்போக்குக் கட்சியாகவும், ஊழல் கட்சியாகவும் தெரிகிறது. ஆனால் அதே காங்கிரஸ் மேற்கு வங்கத்தில்  முற்போக்கு ஆகி விடுகிறது.

கடந்த பிப்.17, 18 ஆகிய தேதிகளில் தில்லியில் நடந்த சி.பி.எம். கட்சியின் மத்தியக் குழு, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும், பா.ஜ.க. வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றுகிறது. காங்கிரஸ் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. கேட்டால் அது யுத்த தந்திரம் (tactical line) என்கிறார்கள்.


கேட்டுக் கொள்ளுங்கள் நண்பர்களே.....நம் கம்யூனிஸ்ட் நண்பர்கள் மட்டும்தான் இது போன்ற யுத்த தந்திரங்களைக் கடைப்பிடிக்கலாம். தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு அந்த உரிமையை அல்லது உரிமத்தை (லைசென்ஸ்) அவர்கள் வழங்க மாட்டார்கள்! 

3 comments:

  1. இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து தோழார்கள் வெளியே வருவார்களா? என்று போக போகதான் தெரியும்! ஐயா. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்டாயாமாக வெளியே அனுப்பியதால் தான் வந்தார்களே தவிற, இவர்கள் தானேவெளியேறவில்லை !அந்த அளவுக்கு தோழர்களின் அரசியல் இருக்கிறது

    ReplyDelete
  2. லட்சியவாதிகள்(?!) அனைவரும்,எல்லா பிரச்சணையிலும் கலைஞர் எதர்ப்பு என்ற புள்ளிக்கு வந்து சேர்வதில் வல்லவர்கள். ஒரு தலைவரை ஒழிப்பதுதான் லட்சியமென்றால்,அது அந்தத் தலைவனின் வேர் எவ்வளவு ஆழம் என்பதற்கான பாராட்டுப் பத்திரம்.

    ReplyDelete
  3. தேர்தல் அரசியலில் வராத வரை தான் கொள்கையும் கோட்பாடும் உறுதியாக பின்பற்ற இயலும். நமது தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பது பல நடுநிலையாளர்களின் கருத்து, ஜெர்மனியை போன்று விகிதாச்சார தேர்தல் முறை அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் எந்த பெரிய கட்சியும் இதை பற்றி வாய் திறக்காது ஏனெனில் அந்த தேர்த முறை வந்தால் இவர்கள் அனைவரும் தூக்கி வீச படுவார்கள் என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும். ஆனால் இடது சாரிகள் காங்கிரஸ் உடன் கூட்டு வைப்பதை விமர்சிக்கும் நீங்கள் திமுக பாரதிய ஜனதா விடம் கூட்டு வைப்பதை விமர்சிக்கமலிருப்பது தான் வருத்தத்திற்குரியது. நீங்கள் கேட்பது எப்படி தெரியுமா அவர்கள் மது அருந்துகிறார்கள் ஆனால் நான் அருந்தினால் விமர்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவதை போல் உள்ளது. அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்கள் சுய லாபங்களுக்காக கொள்கைகளை உதறி தள்ளுகிறார்கள் என்பது தான் நிதர்சன உண்மை. இதில் திமுக விதிவிலக்கு அல்ல. கட்சியை மெம்மேலும் வளர்க்கவும் சம்பாதித்த சொத்துக்களை பாதுகாக்கவும் தான் இவர்களுக்கு பதவி அவசியாமாக இருக்கிறது. மக்கள் நலன் மட்டும் தான் கொள்கை என எடுத்து கொண்டால் கட்சி தானாக வளர்ந்து விடும் என்பது தான் அண்ணாவின் கொள்கை. அதனால் தான் அண்ணாவால் அவ்வாறு சொல்ல முடிந்தது "எங்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு நல்லது செய்வோம் . போடாதவர்களுக்கு அதை விட நல்லது செய்வோம் என்று. அந்த பெருந்தன்மை இன்று எத்தனை தலைவர்களுக்கு உண்டு?

    இந்த கருமத்தயெல்லாம் முன்பே ஊகிக்க முடிந்ததால் தான் பெரியார் தேர்தல் அரசியலை ஒதுக்கி தள்ளினார்.

    ReplyDelete