அண்மையில் இரண்டு திருமணங்கள், தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில், நான் நடத்தி வைத்தவை. ஒரே மேடையில் காவியும் கருப்பும் இணைந்திருந்தது புதிதன்று. அறிவாசான் அய்யா பெரியார் அவர்களும், மறைந்த அறிஞர் தமிழ்த்திரு பெரியவர் குன்றக்குடி அடிகளாரும் பல மேடைகளில் இணைந்து பங்கேற்றுள்ளனர். எனினும் இப்போது நண்பர்கள் சிலர் புதியகேள்வி ஒன்றை எழுப்பினர்.
காவி என்பது துறவறத்தின் அடையாளம். கருப்பு என்பது துக்கத்தின் அடையாளம். இல்லறம் ஏற்கும் மகிழ்ச்சி நிறைந்த மணவிழாவில், அதற்குப் பொருந்தாத இரண்டு வண்ணங்கள் இணைந்து நின்றது பற்றிய ஒரு நெருடல் அவர்களிடம் இருந்தது.
வண்ணங்கள் இயற்கையானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணம். ஆனால் நாம் வண்ணங்களுக்கு நம் எண்ணங்களைப் பூசிப் புதுப்புதுப் பொருள்களைக் கொடுத்துள்ளோம். அதே நேரம் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு வண்ணத்திற்கும் வேறுபட்ட, சில வேளைகளில் நேர் எதிரான பொருள்களையும் நாம் கூறி வருகின்றோம்.
பச்சை என்றால் பசுமை, வளம் ஆகியனவற்றின் குறியீடு என்பது பொதுவான எண்ணம். ஆனால், "அவன் பச்சை பச்சையாய்ப் பேசுகிறான்" என்றால், அங்கு பச்சைக்குப் பொருள் வேறு. மஞ்சள் நிறத்தை மங்களம் என்கின்றனர். ஆனால் \மஞ்சள் ஏடுகள்' மங்கலமானவை அல்ல. நீல வானமும், கடல் நீலமும் நமக்கு மகிழ்ச்சி தருகின்றன. ஆனால், 'நீலப் படங்கள்' கேடு தருபவை.
சிவப்பு என்பது புரட்சிக்கும், பொதுவுடைமைக்கும் மட்டுமின்றி, ஆபத்துக்கும் அடையாளமாக உள்ளது. வெண்மை, தூய்மை மற்றும் சமாதானத்தை மட்டும் குறிக்காது. 'சமரசம்' செய்துகொள்வதற்கும் அதுதான் அடையாளம்.
கருப்பும் அப்படித்தான். கருப்பு துக்கம் என்றால், அய்யப்பன் கோயிலுக்குப் போகின்றவர்கள் ஏன் கறுப்புடை அணிந்து கொள்கின்றனர்? நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல், நீதிபதிகளும் கருப்பு அங்கிகளை அணிவது ஏன்? அவர்கள் எல்லோரும் அவ்வளவு துக்கமானவர்களா?
அங்கே நீதி கோரும் வண்ணம் கருப்பாக இருக்கிறது. நீதி கோருவோர் கறுப்புடையில் இருக்கலாம் என்றால், சமூக நீதி கோருவோர் மட்டும் அந்த உடையை அணியக்கூடாதா என்ன?
அவரவருக்குப் பிடித்த வண்ணங்களை அவரவர் அணிந்து கொள்வோம்! வண்ணங்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
ஆரியர்கள் நம் மூலையில் ஏற்றிய வர்ணாஸ்ர தர்மமத்தின் விளைவுதான் இது நல்ல பதில். நன்றி அய்யா!
ReplyDelete